web log free
December 06, 2025

மக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது : மட்டு. அரசாங்க அதிபர்

அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும்
பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரசின் மூன்றாவது பரவலை கட்டுப்படுத்த முடியாதென மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இங்கு கருத்து வெளியிடுகையில்,

கொவிட் 19 தொடர்பான கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் அவர்களினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய எவ்வாறான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்க வேண்டுமென  தெளிவான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டதாகவும்,
அதற்கு அமைவாக மக்கள் கூடும் இடங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வர்த்தக நிலையங்களில் எவ்வாறாக சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களுக்கான தெளிவுபடுத்தல்கள் இன்றைய கூட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றிலிருந்து பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 42 அன்ரிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2 பேர் காத்தான்குடியிலும் 2 பேர் களுவாஞ்சிகுடியிலும் மேலும் 5 பொலிசாருமாக மொத்தமாக 9 பேர் கொவிட் 19 பொசிட்டீவ் ஆக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு அலைகளைப் போலல்லாது இம்முறை  மட்டக்களப்பில் ஆரம்பத்திலேயே ஒரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக கருதுவதுடன், இருந்தாலும் இதை விரிவடையாமல் கட்டுப்பாட்டிலே வைத்திருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது, பொதுமக்கள் அநாவசியமான தேவைகளுக்காக வீடுகளைவிட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும், அவசிய காரணங்களிற்கு மாத்திரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், ஏனைய நோக்கங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென பொது மக்களை மிக வினையமாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளை பொது மக்கள் கடந்த காலங்களிலே எவ்வாறு அரசாங்க சுற்று நிருபத்திற்கும் அரசாங்க அறிவுறுத்தலுக்கும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் ஒத்துழைப்பு வழங்கினீர்களே அதே போன்று இம் முறையும் அதை உணர்ந்து செயற்படுமாறு கேருவதுடன், இம்முறை இந்த மூன்றாவது அலையானது சிறார்களையும் மாணவர்களையும் ஏனைய இளைஞர் யுவதிகளையும் தாக்குவதை நாம் கண்கூடாக காண்கின்றோம் இதை பொதுமக்கள் முற்று முழுதாக விளங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் அன்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள்,  பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்  உட்பட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd