web log free
January 11, 2025

கொவிட் தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்: பிரதமர் மகிந்த ராஜபக்ஸ

கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது, கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்தார். சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் அவர்களுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மேலும் கருத்து வெளியிடுகையில்,

கௌரவ அமைச்சர் அவர்களே, உங்களை இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொற்று நிலைமையையும் பொருட்படுத்தாது இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உங்களது தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.

தொற்று நிலைமைக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவினர் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். உங்களது இவ்விஜயம் மற்றும் சந்திப்பின் ஊடாக எமது பலமான மற்றும் நட்பு ரீதியிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில், இந்த ஆண்டு இடம்பெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு மற்றும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.

மேலும், வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகள் குறித்தும் நான் வாழ்த்துகிறேன். சீன அரசாங்கம் சுமார் 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிக்கும் அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிற்கு அடைய முடிந்தது. இது ஒரு பெரிய சாதனையாகும்.

கௌரவ அமைச்சர் அவர்களே, இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது தற்போது உலகளாவிய ரீதியில் தெளிவாகியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து, சகல இலங்கையர்களுக்காகவும் சீனா 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தாராளமாக நன்கொடையாக வழங்கியிருந்தமையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்காதிருப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உலகளாவிய ரீதியிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போதைய எமது முன்னுரிமையாகவுள்ளது. அவ்வாறான முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உங்களவு ஆதரவை நான் எதிர்பார்க்கின்றேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே, உங்களவு இவ்விஜயம் குறித்து மீண்டுமொரு முறை நன்றி தெரிவிப்பதுடன், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கும், உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் நெருக்கமாக தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd