கொவிட் 19 தடுப்பூசியின் 2வது ஊசி செலுத்தும் பணிகள் நேற்று கொழும்பில் ஆரம்பமான நிலையில், இன்று (29) பிற மாவட்டங்களில் ஆரம்பமானது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் முதல் கட்ட பணிகள் கிளிநொச்சி மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அதற்கு அமைவாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களிற்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது.
முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசி முதல்கட்டமாக இன்று செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
மாவட்ட ரீதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுகாதார முன் கள பணியாளர்களுக்கு மேற்படி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரதான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகையும் தலைமன்னார் எருக்கலம்பிட்டி ,அடம்பன் , முசலி பகுதிகளிலும் பிரதேச ரீதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
அத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை அடங்கிய துண்டு பிரதிகள் மற்றும் கையேடுகளும் வழங்கப்பட்டது
இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர் வரும் மூன்று தினங்களுக்கு குறித்த 2 ஆம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.