முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த அரசு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (30) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தாங்கள் இறந்து போன தங்கள் உறவுகளை தங்களோடு வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைக்கின்ற மே 18 அந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர இந்த அரச அனுமதிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால், அது அரசாங்கத்தினுடைய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான செயல் ஒன்றாகும்.
மிக முக்கியமாக எங்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கோரிக்கை விடுக்கின்ற மதத் தலைவர்கள் சரி அல்லது இந்தத் தாக்குதலுக்காக விடுமுறை வழங்கி நாடாளுமன்றம் வரைக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு நியாயமான நீதியாக ஜனநாயகத்தை நேசிப்பவர்களான இருந்தால் உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
பகிரங்கமாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு உயிரிழந்தோரினை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அவர்கள் தங்களை மனிதர்களாக இந்த பூமிப்பந்தில் அடையாளப்படுத்த முடியும்.
ஆகவே, இது ஒரு முக்கியமான தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம். உலகத்திலே இருபதாம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பேரழிவு பெரிய அனர்த்தம் அதன் நினைவு கூரலை தடுப்பது பௌத்த மதத்தை நேசிக்கின்ற புத்த பெருமானை வணங்குகின்றவர்கள் புரியும் ஒரு காரியமல்ல.
ஆகவே, அரசு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர எவ்வாறு அனுமதி வழங்கினார்கள். அதேபோல கடந்த காலங்களில் 2016 ல் இருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டார்கள். அந்த வகையில் அவர்கள் வணக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.