இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் திரு.டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
நாணய விதிச் சட்டத்திற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நிதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும்.
அதற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அரச கொள்கை கட்டமைப்பிற்குள் இலங்கை பொருளாதாரத்தின் போக்கு குறித்த கணிப்பும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் திரு.டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், துணை ஆளுநர் திரு.மஹிந்த சிறிவர்தன, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் திரு.சந்திரநாத் அமரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.