சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் உழைக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் தலைசிறந்த தினமாகும்.
பொதுவாக தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
பணியிடத்தில் வியர்வை சிந்தி அனைவரினதும் நல்வாழ்விற்காக நீங்கள் ஆற்றும் சேவையை பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
நாம் அனைவரும் அறிந்த வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு தினமாகும்.
இருப்பினும், உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆண்டு போன்றே இவ்வருடமும் பேரணிகள், கூட்டங்களின்றி சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பேரழிவு சூழ்நிலையில், இலங்கை உழைக்கும் மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி மே தினத்தை புதிய வழியில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலேனும் உழைக்கும் மக்களுக்கான உரிய மரியாதையை எமது அரசாங்கங்கள் வழங்கியுள்ளது என்பதை இத்தருணத்தில் நினைவூட்டுகின்றேன். அத்துடன் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதிலும் உறுதியாக செயற்பட்டோம்.
இரண்டாயிரத்து இருபத்தொன்று ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தமை நாம் பெற்ற வெற்றியாகும்.
அத்துடன் தொழிலாளர் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு ஊழியர் சேமலாப நிதி சட்டம், தொழில் பிணக்குகள் சட்டம் மற்றும் இழப்பீட்டு கட்டளை சட்டம் போன்ற பல தொழிலாளர் சட்டங்களை புதுப்பித்ததன் ஊடாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்துள்ளமை உங்களுக்கான மரியாதை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
'மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்' எனும் தொனிப்பொருளிலான இவ்வாண்டு மே தினத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக இரவு பகலாக உழைக்கும் உங்களது அர்ப்பணிப்பையும், தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உங்களது பங்களிப்பையும் நான் மனதார பாராட்டுகின்றேன்.
உலகவாழ் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்