இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை மறித்தமைக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதாகிய இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தாம் செய்தது குற்றம் என்பதை பகிரங்கமாக ஊடகங்களுக்கு முன்பாக ஏற்றுக்கொண்ட குறித்த சந்தேக நபர், அதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்பும் கோருவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கைக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் தலைமையிலான குழுவினர் கொழும்பு - பொரளைப் பிரதேசத்தில் வைத்து வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக செல்கின்ற வாகனங்களை காவல்துறையினர் மறிப்பதற்காக வீதித்தடைகளை இட்டிருந்தனர்.
நீண்டநேரமாக காவல்துறையினர் போக்குவரத்திற்கு அனுமதிக்காததினால் ஆத்திரமடைந்த வாகன சாரதிகள், அதற்கெதிராக தங்களது எதிர்ப்பினை வாகனங்களில் ஒலியேற்படுத்தியும், கூச்சலிட்டும் வெளிப்படுத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
சம்பவத்தைத் தொடர்ந்து பொரளை காவல்துறையினர் விரைந்து அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததோடு, நேற்று தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு - பத்தரமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஜயரத்ன முதியான்சலாகே நாவின் என்கிற சந்தேக நபர், கடந்த பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்புரிந்து வந்திருக்கின்றார்.
இந்த நிலையில் நீதவான் ரஜின்திரா ஜயசூரிய முன்பாக பிணைகோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல சந்தேக நபருக்கு அனுமதியளிக்கப்பட்டதோடு அவ்வாறு இனி நடந்துகொள்ள வேண்டாம் எனவும் நீதிமன்றத்தினால் ஆலோசனையும் கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்த அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை பொலிஸார் இடைமறித்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சிலருக்குப் பின்னால் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கும், வீதித் தடை முன்பாக வாகன ஒலியெழுப்பி அமைதியின்மையில் ஈடுபட்ட நபருக்கும் இடையே தொடர்பிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணிக்காக வீதியை மறித்த காவல்துறையினரது செயற்பாட்டினை எதிர்த்த இளைஞன் கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு தனிப்பட்ட நபர் ஒருவரது செயலின் கைதுக்குப் பின்னால் இருக்கின்ற மர்மத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.