web log free
January 11, 2025

ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை

ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் இரவுநேர கேளிக்கை போன்றவற்றுக்கு இன்று (01) இரவு 10 மணி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளையில், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக நேற்று (30) வரையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதேபோன்று  கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இக் காலப்பகுதியில் இணைய சேவையின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.,

தக்ஸலாவ மற்றும் குருகுலம் போன்ற தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சிகளின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனிடையே, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் அந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd