மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளானதாகவும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் முற்றுமுழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரனா தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் 12 பேர் களுவாஞ்சிகுடியிலும் 09 பேர் மட்டக்களப்பிலும் 05 பேர் செங்கலடி பகுதியிலும் 04 பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவர்களின் 1020 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
143 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரையில் 10 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையினைப்பொறுத்தவரையில் 14 நாட்களில் 190 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் இறுதி ஏழு நாட்களும் 143 பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரனா சிசிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையில் உள்ளன. இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்றுமுழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன. இதன்காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000 கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம்.
கொரனா மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளில் இருந்து ஒட்சிசனை எடுத்துவரவேண்டியுள்ளது. ஒரு ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களை பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை போன்ற வைத்தியசாலைகளில் எச்யு மற்றும் ஐசியு ஆகியவற்றினையும் நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்குவருமெனவும் தெரிவித்தார்.