ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியின் கீழ் உள்ள கொழும்பு - மஹரகம மாநகர சபை கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆண் உறுப்பினரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர சபை கூட்டத்தினிடையே ஏற்பட்ட தொலைபேசி காணொளி சர்ச்சையை அடுத்து ஆண் உறுப்பினரை சம்பந்தப்பட்ட பெண் உறுப்பினர் கைகளை நீட்டி தாக்கிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பின் புறநகராகிய மஹரகம மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கின்றது.
மாநகர சபை நேற்றைய தினம் கூடியபோது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகரவுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிஷாந்த விமலசந்திரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் உறுப்பினரது கையடக்கத் தொலைபேசியிலிருந்த காணொளி ஒன்றினால் இந்த வாக்குவாதம் ஏற்பட ஆரம்பித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும், இவ்விரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே திடீரென பெண் உறுப்பினரது கையடக்கத் தொலைபேசி காணாமல் போனதால் ஆத்திரமடைந்த அவர் திடீரென நிஷாந்த விமலசந்திர மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளார்.
குறித்த இரு உறுப்பினர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றபோது ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அதேபோல எதிர்கட்சி உறுப்பினர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை அங்கு செய்தி அறிக்கையிடலுக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவாகியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலை நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகர மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருக்கின்றார்.
இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சாவித்திரி குணசேகரவை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித் அதே கட்சியைச் சேர்ந்த நிஷாந்த விமலசந்திர அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை காணொளி மூலம் பதிவுசெய்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியமையே நேற்று இடம்பெற்ற பிரச்சினைக்கு அடிப்படையிலான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.