web log free
January 11, 2025

நுவரெலியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது

நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் உட்பட மூன்று பேரை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

நீண்ட காலமாக நோர்வூட் நகரப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சமான முறையில் இடம்பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து, குறித்த சுற்றிவளைப்பு நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.ஏ.சி.ஆர். பிரேமலால் தலைமயில் நடைபெற்றது.

மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சா 150 கிராம், ஐஸ் ரக போதைப்பொருள் 10 சிறிய பக்கட்டுகள், ஹெரோயின் ஒரு கிராம், 14 லைட்டர்கள், 12 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம், இரண்டு செல்லிடப்பேசிகள், போதை பொருள் பாவனைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், போதை பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தும் பொலிதீன்கள் ஆகியன இதன் போது பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பின் போது போதை பொருள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்தபோது முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கரவண்டி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகம் செல்லிடப்பேசினூடாக இடம்பெற்று வந்துள்ளதாகவும், சந்ததேக நபர்களிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞன் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் கொழும்பிலிருந்து போதைப்பொருட்கள் கொண்டு வந்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் சாரதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் இதன் போது தெரிவித்தோடு,கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd