கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருகின்ற நிலையில், மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை முன்பாக மிகப்பெரிய பிரச்சினையாக கோவிட்-19 தொற்று காணப்படுகின்றது. தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்திருப்பதோடு அதுசார்ந்த எந்த சந்தேகமும், நெருக்கடியும் இல்லை. தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதமே இன்று சற்று பிரச்சினையாகவுள்ளது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களின் ஆய்வுகூடங்களில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பூனே பகுதியிலுள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகிய சீரம் நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாரதூர நிலைமையே இதற்கு காரணமாகும். இதனால், தடுப்பூசியை பெறுவதிலுள்ள தாமதமானது எமது நாட்டிற்கான பிரச்சினை மாத்திரமல்ல. இதுவரை 03 வகையிலான தடுப்பூசிகள் எமது நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி மற்றும் வேறு மாற்றுவழிகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. கிராம சேவகப்பிரிவு, பொலிஸ் பிரிவுகள் என்பன அவசியமாக நிலைமையில் மூடப்பட்டுள்ளதுடன், நிலைமை சரியாகியான் பின்னர் மீளத்திறக்கப்படுகின்றன. இதுதவிர, வேறு நடவடிக்கை குறித்தும் அரசாங்கம் சிந்தித்து நடவடிக்கையை எடுக்கவும் தயாராகவுள்ளது.
மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் அவசியமான தருணத்தில் பயணக்கட்டுப்பாடு விதித்து அமுல்படுத்தவும் அரசாங்கம் தயாராகவுள்ளது. ஆரம்பத்திலேயே எந்த நடவடிக்கையையும் நாங்கள் நிராகரித்தவில்லை. கொரோனா தொற்று நாளுக்குநாள் மாற்றமடைகிறது. அதனால் அதனைக்கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து அமுல்படுத்த அரசாங்கம் தயாராகின்றது. இதனிடையே பலவிதமான விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. மக்களின் ஜீவனோபாயம் பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.