திரிபடைந்த வைரசுக்களின் பரவல்
உலகநாடுகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மேலும் பலவாறு திரிபடைந்து வருகின்ற அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிலும் இலங்கையை பொறுத்தமட்டில் மேல்மாகணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெல்டா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவ் டெல்டா வைரசின் திரிபுபட்ட தன்மைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
வைரசு தொடர்பான ஆய்வாளர்கள் 'எப்சைலோன்' என்னும் வைரசின் தாக்கமானது வெகுவிரைவில் இலங்கையை தாக்கும் என கருத்து கணிப்பை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் Covid - 19 ன் வேகமான பரவலால் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய நாடுகளை விட மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது. தற்போது இலங்கை 64வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிச்செல்கின்றன. சுகாதார அமைச்சின் தகவல்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் சுமார் 3000யினை தாண்டியுள்ளது. இறுதி 11 நாட்களில் மாத்திரம் 1290 Covid மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டின் இம் மோசமான நிலையினை குறித்து சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
நாட்டை அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் விரைவில் அரசாங்கம் மக்களின் நடமாட்டம் மற்றும் அநாவசியமான ஒன்றுகூடல் என்பவற்றை தடுக்க வேண்டும். இதன் படி நாட்டில் சில சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நள்ளிரவு 10மணி முதல் அதிகாலை 4மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சகலவிதகான பொதுநிகழ்வுகளுக்கும் தடைவிதிப்பதாகவும் பொது ஒன்றுகூடல் இடங்கள் மற்றும் உணவகங்களில் 50வீதமானோருக்கு குறைவான பொதுமக்களே ஒரே நேரத்தில் இருக்க முடியும் என இராணுவதளபதி ஜெனரல் டி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதலில் எப்சைலோன் எனும் வைரஸ் அடையாளம் காணப்பட்டதுடன் தற்போது தெற்காசிய நாடுகள் உள்ளடங்களாக சுமார் 34 நாடுகளில் இவ் வைரஸ் பரவி கொண்டிருப்பதாகவும் பாக்கிஸ்தானில் மீண்டும் மோசமான சூழ்நிலை உருவாகவும் எப்சைலோன் எனும் வைரஸின் பரவலே காரணமாகும். இலங்கையில் இவ்வாறான சூழ்நிலை உருவாகமலிருக்க நாட்டில் விதிக்கப்படும். அனைத்து சட்டங்களையும் பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்படல் வேண்டும்.
தற்போது தற்காலிகமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமல்லாது மேலும் பல நடவடடிக்கைகள் கடுமையாக்கப்படல் வேண்டும். இல்லாவிடில் நாட்டின் நிலமையானது மிகவும் மோசமாக மாறிவிடும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளல் இன்றியமையாதது. முக்கியமாக சுகாதார அமைச்சின் கருத்திற்கேற்ப நாட்டில் அனைவரும் தடுப்பு ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன. எனினும் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் 1ம் தடுப்பு ஊசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தடுப்பு ஊசிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கல் மட்டுமே சிறந்ததாக அமையாது அதற்கு மாறாக உரிய நேரத்தில் உரிய பிரதேசங்களுக்கு அவற்றை பெற்று கொடுக்க வேண்டும்.
தடுப்பு ஊசிகளை பெற்றுக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி அவர்கள் வைரசுக்கள் தொடர்பான நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதேபோல பரவலை கட்டுபடுத்தும் சாத்தியம் உண்டு. இதனை மேலும் விரிவுப்படுத்தினால் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை மாற்றியமைக்கலாம். இது தொடர்பாக அரசாங்கமானது நுணுக்கமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாங்கத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியாகவும் துல்லியமாகவும் உரிய முறையில் உரிய நேரத்தில் தாமதமின்றி அமையுமாயின் அதுவே நாட்டிற்கு பெரும் பலம்.