அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்று கூறினார்.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, “நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொய்யான தகவல்களைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.
அத்துடன், “மிலேனியம் சவால் அமைப்போ அல்லது வேறெந்த அமெரிக்க முகவர் அமைப்போ, அலரி மாளிகையில் செயலகத்தை அமைக்கவில்லை. பொய்களைக் சொல்வதற்கும் ஒரு எல்லை உள்ளது.” என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, குறிப்பிட்டார்.