முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினடம் காணப்பட்ட திறமை மற்றும் சரியான தலைமைத்துவம் காரணமாகவே 30 வருடங்கள் காணப்பட்ட யுத்தத்தை 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற “எளிய” அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய சவாலே தற்போது எம்மிடம் உள்ளது. அன்று நாங்கள் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றிப்பெற்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ, அன்று பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் ஆட்சியை பொறுப்பேற்றார். சரியான தலைமைத்துவம், தீர்மானம் எடுக்கும் திறமை, பிரச்சினைகளுக்கு சரியான தீர்மானங்களை வழங்கும் திறமை ஆகியவற்றால் 30 வருடங்கள் காணப்பட்ட யுத்தத்தை 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை, எனினும், எதாவதொரு வரையறையின் கீழேயே முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.
அதன்காரணமாகவே உலகின் ஏனைய நாடுகள் வெற்றிப்பெற்றுள்ளன. எந்தவொரு நிலையிலும் அரசியலமைப்பினை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் எமது பொருளாதாரத்தில் நாங்கள் வெற்றிப்பெற முடியும்.
யுத்தத்தை நிறைவு செய்து நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது நாட்டை நோக்கி மீண்டும் வந்தனர். நாட்டில் நிலையான தன்மை காணப்பட்டால் முதலீட்டாளர்கள் மீண்டும் வருவார்கள்.
பலவீனமான மத்திய அரசாங்கம் என்பது பலவீனமான அரசாங்கமாகும். பலவீனமான அரசாங்கத்தால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. நிலையான கொள்கை வேண்டும். நாட்டின் கொள்கையானது அரசாங்கம் மாறும்போது, மாற்றமடைய வேண்டியதில்லை.” என்றார்.