அஜித் நிவாட் கப்ரால் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து மத்திய வங்கியின் ஆளுநராக நியமனக் கடிதம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் படி அஜித் நிவாட் கப்ரால் இன்று முதல் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ ஆளுநராக பெறுப்பேற்றுள்ளார் என தெரியவருகிறது.
1954 டிசம்பர் 14 பிறந்த அஜித் நிவாட் கப்ரால் தனது கல்லூரி படிப்பினை சென். பீட்டர் கல்லூரி மற்றும் சென் செபஸ்தியன் கல்லூரியிலும் முடித்துக்கொண்டு ஓர் பட்டயக் கணக்காளராக தன் பணியை தொடர்ந்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் சவுத் ஏசியன் பெடரேஷன் ஒவ் எக்கவுண்டன்ஸ் என்பவற்றின் தலைவராகவும் பொருளாதார அலுவல்களில் இலங்கை ஜனாதிபதியின் மதியுரையாளராகவும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சிற்கான செயலாளராகவும் சிறந்த நடைமுறையில் முதல் குறியீட்டினை அபிவிருத்தி செய்த கம்பனி ஆளுகைக் குழுவின் தலைவராகவும் உபாயத் தொழில்முயற்சிகள் முகாமைத்துவ முகவர் சபையில் உறுப்பினராகவும் வியாபார மீளெழுச்சி மற்றும் முழுமையான மாற்றங்கள் திட்டமிடல் மற்றும் கம்பனி ஆளுகையில் நிபுணத்துவம் பெற்ற முகாமைத்துவ ஆலோசனையாளராகவும் தொழிற்பட்டார்.
திரு. கப்ரால் 2000ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் ஐசநோவர் நிறுவனத்தின் பல்-தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கத்துவராவார். திரு. அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் பன்னிரண்டாவது ஆளுநராக 2006 யூலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2015 சனவரியில் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதனையடுத்து தற்பொழுது 16வது ஆளுநராக 2021 செப்டெம்பர் 15ம் திகதி பெறுப்பேற்றுள்ளார்.