கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விமான பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் என்பதுடன் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹோட்டல்களில் ஒருநாள் தங்க வைக்கப்பட்டு பெருமளவு பணம் அறிவிடப்படுவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிசீஆர் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு, மூன்று மணித்தியாலங்களில் பரிசோதனை அறிக்கை வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.