பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இன்றையதினம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்குகின்ற நிலையில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்களே இருப்பதாக கூறப்படுகிறது.
மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகால மேலதி அவகாசக் காலத்தில், மனித உரிமைகள் பேரவையின் இரண்டு அமர்வுகளில் இலங்கை குறித்த இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வின் நேற்றையக் கூட்டத்தின் போது, இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலெட், இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்ட பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்படாதிருக்கின்றமை குறித்து கவலைத் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் கிளை அலுவலகம் ஒன்றை திறக்க எதிபார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும் சட்டங்களுக்கு அமைய, இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை ஒன்றை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
மேலும் மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார்.
மேலும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.