விவசாய சமூகத்திற்கு தேவையான உரம் உட்பட அனைத்துத் தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குளிரூட்டப்பட்ட நாடாளுமன்றத்திற்குள்ளே இருந்து கொண்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமை பேசினாலும் அது உண்மைக்கு புறம்பானது.
தமக்குத் தேவையான உரம் இல்லாமல் விவசாயிகள் பெருமூச்சு விடுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் "கொவி ஹதகெஸ்ம" நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றொரு கட்டம் அம்பலாங்கொட - மீடியாகொடவிலுள்ள கறுவா உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
நாடாளுமன்றத்தில் காட்டப்படும் மாயை உலகம் விவசாய நிலத்தில் இல்லை. இந்தப் போலி வார்த்தைகளுக்கு எதிராக மக்கள் நிச்சயமாக பாடம் புகட்டுவார்கள்.
உலகின் சிறந்த கறுவாப்பட்டை உற்பத்தி செய்யும் நாடாக நற்பெயரைப் பெற்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அத்தியாவசியமான உரம் இல்லாததால் கறுவாப்பட்டை செய்கையின் சிறந்த பயன்களை விவசாயிகள் பெற முடியாது போயுள்ளது.
உலகின் முன்னணி கறுவா வழங்குநராகவும், மிக உயர் தரமான கறுவா வழங்குநராகவும் புகழ்பெற்றுள்ள இலங்கை தற்போது மிகவும் நெருக்கடியில் உள்ளது என்பதை கறுவா விவசாயிகள் வெளிப்படுத்தினர்.
உரத்துக்கு தடை விதிக்கும் அரசின் கொள்கையால் தாம் அசௌகரியமான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துலால் பண்டாரிகொட, விஜேபால ஹெட்டிஆரச்சி உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும், பிரதேசத்தின் கறுவா விவசாயிகளும் கலந்து கொண்டனர்.