கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக அரச ஆதரைவச் சேர்ந்த 11 கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்த நிலையில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த அவர்கள் கடிதம் எழுதிய போதிலும் பிரதமர் அல்லது நிதியமைச்சருடன் இது தொடர்பில் பேச்சு நடத்துமாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.