web log free
January 12, 2025

“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” ஜனாதிபதி தெரிவிப்பு!

உலகத் தலைவர்கள் மாநாட்டில், இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நாட்டு நேரப்படி, நேற்று (31) மாலை 5.00 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளது.

இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இச்சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்றும் குறிப்பிட்டார்.

“இச்செயற்பாடுகள் பாரியளவில் பாராட்டப்பட்டாலும், ஒருசில விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்களுக்கு மத்தியில், அதிகளவில் பசளையைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துக்கொள்ளும் வழிவகைகளைக் கையாளப் பழகியிருக்கும் விவசாயிகளும் இதனை எதிர்க்கின்றனர். இலங்கையின் சிறந்த விவசாய உரிமைகளை அவதானிக்கும்போது, இந்நிலை மிகவும் வருத்தத்துக்குரியது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்பப் பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றில் வர்த்தகத்துக்கு பாரியதொரு பொறுப்பு உள்ளதோடு மேலாண்மைக்காக முதலீடு செய்யும்போது, பாரியதொரு பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து, சுகாதார நலனை உறுதி செய்துகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடனும் இதனை நடைமுறைப் படுத்துவோமாயின், மக்களுக்கும் எமுது பூமிக்கும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

100 சதவீதமளவில் பசுமை விவசாயத்துக்கு மாறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ள உலகின் முதல் நாடாக இலங்கை இருப்பதாகக் குறிப்பிட்ட சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீர, காலநிலை மாற்றத்துக்கான சிறந்த தீர்மானத்துடன்கூடிய பசுமை - சமூகப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றுக் காலம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள நைதரசன் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், நைதரசன் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இலங்கையும் அந்தச் சவாலை வெற்றிகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சர்வதேச நைதரசன் முகாமைத்துவக் கட்டமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் மார்க் ஸட்ன் அவர்கள், “நைதரசன் மற்றும் காலநிலை” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

“காலநிலைக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை மற்றும் ஒத்துப்போதல் தொடர்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் COP: 26 மற்றும் அதனைக் கடந்த” என்ற தலைப்பின் கீழ், சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க கருத்து தெரிவித்ததோடு, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேனவும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

Last modified on Monday, 01 November 2021 09:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd