web log free
September 12, 2025

நாகலகம் வீதி நீர்ப் பம்பி நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள்

கொழும்பு - நாகலகம் வீதி நீர்ப் பம்பி நிலையம், இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளால் கண்காணிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தித் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், 55 உப திட்டங்கள் உள்ளடங்கப்பட்டதோடு, நாகலகம் வீதி நீர்ப் பம்பி நிலையத் திட்டமும் அதில் உள்வாங்கப்பட்டிருந்தது.

கொழும்பு நகரில் மழை நீர் நிரம்புவதை தடுத்தல், ஏனைய காலங்களில் வடிகால்களில் நீர் குறைவதினால் ஏற்படும் அசுத்த நிலைமையைத் தடுத்தல் என்பன இந்த உப திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். ஒரு செக்கனுக்கு 30 கனமீற்றர் களனி ஆற்றுக்கு பாய்ச்சக்கூடிய வகையில் 05 பம்பிகள் மற்றும் ஒரு செக்கனுக்கு 12 கனமீற்றர் அளவு நீரைக் களனி ஆற்றிலிருந்து கால்வாய்களுக்கு எடுத்துவரக்கூடிய இரண்டு பம்பிகள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு தானியங்கி கதவுகள் மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பும் இதில் அடங்கும்.

முழுமையான திட்டத்துக்கும் 321 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதோடு, உலக வங்கி 213 மில்லியன் டொலர்களை இலகு கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் அதற்காக செலவிட்டுள்ள தொகை 108 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

முழுமையான நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்ய முடியுமென்று இத்திட்டத்தின் பணிப்பாளர் ஏ.எம்.துஷாரி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.

இதற்கு இணையாகத் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் 47 கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும். விஹாரமகாதேவி, காக்கைத்தீவு கடற்கரை மற்றும் பெத்தகான சதுப்பு நிலப் பூங்காவை மேம்படுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் உப தலைவர் ஹார்ட்விக் ஷெஃபர் (Hartwig Schafer) உள்ளிட்ட பிரதிநிதிகள், இராஜாங்க அமைச்சர்களான நாலக்க கொடகேவா மற்றும் மொஹான் பி. டீ சில்வா ஆகியோருடன் அதிகாரிகள் சிலரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd