கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவும் பட்சத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு பரிந்துரைக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
“பொது மற்றும் தனியார் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில் உள்ள பலவீனங்களால் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இது நான்காவது அலையாக மாறி நாடு மூடப்படுமா, கல்வி நிலையங்கள் மூடப்படுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே, பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றினால், எதிர்காலத்தில் இந்நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் நாம் இப்போது செய்வது போல் சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து மீறினால், நான்காவது அலையின் தாண்டவத்தை மீண்டும் அனுபவிப்போம் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்கு வந்து தொற்றுக்குள்ளானவர்களை சந்திக்கலாம். ஆனால் பெற்றோர்கள் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம். இந்த சம்பவங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சரிபார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கொவிட் தொற்று பாடசாலை கட்டுப்பாட்டிற்கு அப்பால் பரவினால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் பாடசாலைகளை மூடுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவோம்.
அதேபோன்று ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் அரச தலைவரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் இந்த நேரத்தில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.