சதுப்புநிலம் (Marsh land) என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்கள் நீர்வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய அடர்த்தியான உயிர்ச்சூழல் மண்டலமாக இருப்பவை.
நிலத்தின் மேற்புற நீரைச் சேமித்து வைத்தல், நிலத்தடி நீரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மேம்படுத்துதல், நீரை வடிகட்டி சுத்தமாக்குதல், வெள்ள அபாயத்தைத் தடுத்தல், மண் அரிப்பைத் தடுத்தல், நுண்ணுயிர் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ஆகியவை சதுப்பு நிலத்தால் விளையும் நன்மைகள்.
ஒரு சதுப்பு நிலம் அருகில் இருந்தால் அதனருகில் கண்டிப்பாக நிலத்தடியில் நீர் வளம் நன்றாக இருக்கும்.
உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடு தமிழகத்தில் உள்ள பிச்சாவரம். இங்கு இன்று வரை எந்த புயலும் கடல் சீற்றமும் தாக்காமல் இருக்க காரணம் சதுப்பு நிலமும் அதன் கண்டல் காடுகளுமே.
1965ம் ஆண்டு கணக்கின்படி சென்னையில் 5500 எக்டேராக இருந்த சதுப்பு நிலம் 2013ல் வெறும் 600 எக்டேராக சுருங்கிவிட்டது. சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, செங்கல்பட்டு, வேடந்தாங்கல் பகுதிகள் சதுப்பு நிலங்களே!
இப்போது 80% சதுப்பு நிலங்கள் இப்பகுதிகளில் காணாமல் போயிற்று. இதனால் பயனடைந்து வந்த பலவித பறவை இனங்கள் இப்போது இல்லை. இயற்கை சூழல் மோசமடைந்து புவியின் வெப்பமும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏரி குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது நல்ல விடயம். ஆனால் பள்ளிக்கரணையில் உள்ளது ஏரியா குலமோ அல்ல. அது, சதுப்புநிலம். அதை சாதாரண ஏரிகுளங்களோடு ஒப்பிடக்கூடாது.
இம்முயற்சி அதன் பல்லுயிரின வளத்துக்கு கேடு விளைவிக்கும். உடனடியாக அரசு இம்முயற்சியைக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கையை அதன் தன்மையுடன் இயல்பாக இருக்கவிட வேண்டும். இல்லையேல் இயற்கை மனிதர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.