நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அதேபோன்று காக்காச்சிவட்டை - ஆனைக்கட்டியவெளி பிரதான வீதியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பொலிஸாரும் போரதீவுப்பற்று பிரதேச சபையினரும் அப்பகுதியினூடாக மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதேபோன்று, கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வெளியேற வசதியாக கடற்படை மற்றும் இராணுவத்தினரால் விசேட படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.