web log free
September 12, 2025

மலையகத்தில் வெடிக்கும் போராட்டம்! "அரசாங்கமே கண் இல்லையா?" என்கின்றனர் மக்கள்

நாட்டில் தற்போது உச்சத்தை தொட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவித்தும் நுவரெலியா - அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், "கோட்டா அரசாங்கமே உனக்கு கண் தெரியவில்லையா?" என்ற பல கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுகின்றதாகவும், இதனால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும், இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தங்கள் குறைகளை வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் கூறுகின்றனர். 

தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில்,

தேயிலை செடிகளில் கொழுந்தின் விலைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீதாசாரத்தில் சம்பள கணக்கை முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளது என மனம் உருகும் படி தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.

மேலும், திடீரென கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் விலை அதிகரிப்பு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தோட்ட நிர்வாகமும் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங்களை செய்வதில்லை. இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லிலடங்காத துயரங்களை அனுபவித்து வருவதாக இவர்கள் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததுடன் தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத் தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இந்த அதாங்க குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமா? என்பது அனைவரது கேள்வியாக இருக்க தம் முயற்சியை கைவிடாது போராடுகின்றனர் அந்த பாவப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள்! 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd