web log free
January 13, 2025

நடைமுறைகள் ஏன் தொடர்ந்து பின்பற்றப்படுவதில்லை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை சவக்காரம் இட்டுக் கழுவுதல் அல்லது தொற்று நீக்கியைப் பயன்படுத்தல் போன்ற சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணியவாறு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

எனவே, ஆசிரியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு கடைப்பிடிக்கும் போதுதான் மாணவர்களும் அவற்றைப் பின்பற்றுவார்கள். அதற்கான அறிவுறுத்தல்கள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று சுகாதார அமைச்சு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். எனவே, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதனை நடத்துனர்கள் கண்காணிக்கவேண்டும். அவை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Last modified on Wednesday, 08 December 2021 01:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd