நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வுகளை பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பின் பிரகாரம் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளபோதிலும் விசேட சந்தர்ப்பங்களின் போது மாத்திரமே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கமைய பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி வரை ஜனாதிபதி பிற்போட்டுள்ளார். இதனால் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பாராளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகள் பாதிப்படைவதற்காகவும், கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான இரகசிய ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துகள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை மட்டுப்படுத்தி இருக்கின்றாரா? என்ற வலுவான சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் பாராளுமன்ற அமர்வுகளை ஜனவரி மாதம் 18ஆம் திகதி வரை பிற்போட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான காரணம் என்ன? இவ்வாறு பிட்போட்டதன் விளைவாக பாராளுமன்ற தெரிவுக்குழு உள்ளடங்கலாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்படும். ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்திற்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்பட்டதா? அல்லது அவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு விரோதமானவையாக அமைந்ததா? என்பது குறித்து எமக்கு தெரியாது இன்று திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் அரச நிதி பற்றிய குழு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக அமைந்தன. குறிப்பாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் வலுவிழப்பதுடன் மீண்டும் முதலில் இருந்து அவற்றை ஆரம்பிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே பாராளுமன்ற அமர்வுகள் பிற்போடப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு இருப்பு 1.4 பில்லியன் டொலர்களை விடவும் குறைவடைந்திருப்பதுடன் அது எமக்கு இரு வாரங்களுக்கு கூட போதுமானதல்ல.
ஒருபுறம் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிப்பதன் விளைவாக மக்களின் வாழ்க்கைச் செலவு சடுதியாக உயர்வடைந்து அவர்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்க மறுபுறம் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி மக்கள் அச்சத்திற்கு முகம் கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் இன்றுவரை அதற்குரிய தீர்வை வழங்காமல் உள்ளது.
ஆனால் ஜனாதிபதி, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை மட்டுப்படுத்த முனைவது வலுவான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என மேலும் உறுதி கரமாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.