யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.
யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையாக வாளினால் வெட்டியுள்ளனர்.
கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.
வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.