பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க சீனாவும் இந்தியாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கூறினார்.
வட மாகாணத்திலுள்ள இரண்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் செயற்றிட்டங்களுக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வதற்கு சீனாவும் இந்தியாவும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. யாழ். பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டமும் இதில் ஒன்றாகும்.
இதனை தவிர, ஏற்கனவே சீனாவின் அட்டைப் பண்ணை அமைந்துள்ள கிளிநொச்சி கௌதாரிமுனையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டப்பட்டது.