குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை மற்றும் உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சினதும் நிதி ஒதுக்கீடுகளே மீண்டும் முன்வைக்கப்படவுள்ளன.
குறித்த இரண்டு அமைச்சுகளுக்கான நிதிஒதுக்கீடு, கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்த குழு நிலை விவாதத்தின் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தன.
இதனால், சுமார் ஐந்தரை இலட்சம் அரச பணியாளர்களுக்கு சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் சில திருத்தங்களுடன் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இன்று மீண்டும் குழுநிலை விவாதத்துக்காக சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.