செயலகங்களை அதிகரிப்பது தொடர்பாக எற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மலையக பகுதிகளில் நடைமுறைபடுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை.
ஆனால் பெரும்பான்மை மக்கள் வாழுகின்ற காலியில் அதனை உடனடியாக நடைமுறைபடுத்தி அதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ள அரசாங்கம் மலையக மக்களை மறந்து செயற்படுவதை காண முடிகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியேறிய வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி மனோகணேசன் திகாம்பரம் வேலுகுமார் மற்றும் என்னுடைய ஒத்துழைப்புடனும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமே பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்பது.இதற்கு யாரும் தனியாக உரிமை கோரவோ அல்லது நான் தான் செய்தேன் என்று சொல்லவோ முடியாது.
நாங்கள் ஒற்றுமையாக தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த வெற்றியை எங்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது.எனவே இது ஒரு கூட்டு பொறுப்பாக செயற்பட்டதன் காரணமாகவே சாத்தியமானது.வெறுமனே நானோ அல்லது வேறு யாருமோ நினைத்திருந்தால் இதனை சாதித்திருக்க முடியாது.இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று (07.02.2022) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நான் இது தொடர்பாக உரையாற்றிய பொழுது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க அதனை ஏற்றுக் கொண்டதுடன் அதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் இந்த விடயம் தொடர்பாக எல்லா இடங்களிலும் குரல் கொடுத்து வருகின்றோம். மலையகத்தில் கையெழுத்து திரட்டி சாதித்த விடயம் எதுவும் இல்லை.எனவே இதனை பாராளுமன்றத்திலும் மாவட்ட அபிவிருத்தி குழுவிலும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பதன் மூலமே சாதிக்க முடியும்.
ஏதிர்வருகின்ற பாராளுமன்றத்திலும் இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் உட்பட அனைவரும் அலுத்தம் கொடுப்போம்.பிரதேச செயலகங்கள் அதிகரிப்பதன் மூலமாக எங்களுடைய அபிவிருத்தி அதிகரிக்கும் கிராம சேவகர் பிரிவு அதிகரிக்கப்பட்டால் எங்களுக்கான நிதி அதிகரிக்கும் இப்படி பல நன்மைகளை எங்களுடைய மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.ஆனால் இந்த அரசாங்கம் எங்களுடைய அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகளும் இது தொடர்பாக அலுத்தம் கொடுக்க வேண்டும்.அதனை விடுத்து உப பிரதேச செயலகங்களை திறந்து வைப்பதை நிறுத்திவிட்டு வர்த்தமாணியில் குறிப்பிட்டுள்ளது போல பிரதேச செயலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காhலி மாவட்டத்தில் 1063334 பேர் இருக்கின்றார்கள் அங்கே 22 செயலக பிரிவு இருக்கின்றது.வெலிவிடிய பிரதேச செயலக பிரிவில் மக்கள் தொகை 29347 கோணபீனுவல பிரதேச செயலகத்தில் மக்கள் தொகை 21755 ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் 768000 அதிகமான மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் எங்களுக்கு இருப்பதோ 5 மாத்திரமே.
அதிலும் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் தொகை 220000 அதிகமானது எனவே இது எங்களுடைய மாவட்டத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.இதற்காக மாவட்டத்தின் அனைவரும் அதாவது சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.இது வெறுமனே சிறுபான்மை தமிழர்களின் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவான ஒரு விடயமாக கருதி அரசாங்கம் செயற்பட வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.