அவசரத்திற்கு நமக்கு உதவி புரியும் இந்தியாவை ஒருநாளும் பகைத்துக் கொள்ளக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பகைத்துக் கொள்வதன் மூலம் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படும் என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறினார்.
இலங்கையில் கேஸ், பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளை பொருளாதார நெருக்கடியும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பழனி திகாம்பரம் நாடு இந்தளவு பாரிய சிக்கலில் இருக்கும் போது இந்தியா 900 மில்லியன் கடனுதவி வழங்கி கை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும்போது சில தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் சீனாவுடன் அவ்வாறு அபிவிருத்திகளை செய்ய முனையும்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில்லை எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பழனி திகாம்பரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்த அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கி விட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வெறும் 500 ரூபா பெறுமதியான கோதுமை மா வழங்கி ஏமாற்றி உள்ளதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்கள் செயல்படுத்தப்படாமல் உப செயலகங்களை ஆரம்பித்து தற்போது அதனையும் மூடி உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் காலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பிரதேச செயலகங்களை முழுமையாக திறந்து வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களும் இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய மக்களை போன்றவர்களே எனவும் ஒரு நாட்டிற்குள் இவ்வாறு வேறுபாடு காட்ட வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் பழனி திகாம்பரம் கோரிக்கை முன்வைத்தார்.
பெருந்தோட்ட மலையக மக்கள் இன்று அன்றாடம் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவர்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஏற்கனவே ஆயிரம் ரூபா என்று அவர்கள் ஏமாற்றப்பட்டது போதும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இன்றையதினம் சபையில் உரையாற்றும்போது தெரிவித்தார்.