web log free
December 22, 2024

ரெலோ ஊதிக் கெடுத்த சங்கு!

 

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி...’ என்ற நிலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று வந்திருக்கிறார்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை இந்தியா இலங்கைக்கு வழங்க வேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் செயற்திட்டத்தை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பித்தது. அதில், இணைந்து கொண்டதன் மூலமே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அவதிப்பட வேண்டி வந்திருக்கின்றது. 

சில வாரங்களுக்கு முன், இந்தியப் பிரதமருக்கான கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினால் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. 13வது திருத்தத்தை முன்னிறுத்தி ரெலோ ஆரம்பித்த கடிதம் எழுதும் காவடியை தமிழரசுக் கட்சி ஒருவாறாக சமஷ்டிக் கோரிக்கைகள் அடங்கிய கடிதமாகவும் வரைந்து இறக்கி வைத்தது. ஆனால், ரெலோ தூக்கிய 13வது திருத்தம் எனும் காவடியை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பல தரப்புக்களும் இரசிக்கவில்லை. அதனை வெளிப்படையாக எதிர்க்கவும் செய்தன. சும்மா கிடந்த சங்கை ரெலோ ஊதிக் கெடுப்பதாக குற்றஞ்சாட்டின. குறிப்பாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி அதனை பொது வெளியில் விமர்சிக்கவும் செய்தது. ஆனால், கடிதம் எழுதும் விடயம் இந்தியா சார்ந்தது என்ற நிலையில், சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கடிதத்தில் கையெழுத்திட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் அனைவரும் இந்தியாவின் ஏவல் பிள்ளைகள், எஜமானர் என்ன சொன்னாலும், அதனை தலையால் நிறைவேற்றும் அர்ப்பணிப்போடு இருப்பவர்கள். 

13வது திருத்தச் சட்ட விடயத்தை ரெலோ கையிலெடுத்தமைக்குப் அந்தக் கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனின் முதலமைச்சர் கனவு காரணம் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகும் விருப்பம் தனக்கு இருப்பதாக தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் அண்மையில் வெளிப்படுத்தவும் செய்தார். நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான வரைபு விடயத்தில், ரெலோ கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ‘ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி’ என்ற விடயத்தை சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்தனர். அதனை, தென் இலங்கையிலும் தமிழ் மக்களிடமும் சேர்ப்பிக்கும் வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், அப்போது, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி என்ற விடயத்தை படு மூர்க்கமாக எதிர்த்து ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஊடக சந்திப்புக்களை நடத்தினார். புதிய அரசியலமைப்புக்கான வரைவில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் வெளிப்படையாக கூறி வந்தார். ஆனால், இன்றைக்கு அவர்தான், 13வது திருத்தத்தை தூக்கிக் கொண்டு திரிகிறார். சில ஆண்டுகளுக்குள் அவருக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் யாரினால், எப்போது, ஏன் ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது. அதனை அவர் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. மாறாக, தமிழ்க் கட்சிகளை ஒன்றுமைப்படுத்தும் தங்களுடைய செயற்திட்டத்தை சிலர் குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார். 

தமிழ்க் கட்சிகள் பொது விடயங்களில் ஒருமித்து செயற்படுவது என்பது அத்தியாவசியமானது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பொது விடயங்களில் செயற்படுவதற்கு கட்சிகள் தயாராக இருக்க வேண்டும். மாறாக, வெளிச் சக்திகளினதோ அல்லது குறுநல விடயங்களையோ முன்னிறுத்தி பொது விடயங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்படும் வேலைகளை செய்ய முடியாது. 13வது திருத்தம் என்கிற விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தூக்கிச் சுமக்கப்பட வேண்டிய விடயமல்ல. அதுபோல, அதனை ஏறி மிதிக்க வேண்டிய விடயமும் அல்ல. அப்படிப்பட்ட நிலையில், திடீரென 13வது திருத்தம் என்ற விடயத்தை மக்களின் தலையில் ஏற்றி வைக்கும் விடயம் சந்தேகத்துக்குரியதே, ரெலோவோடு அதற்கு ஒத்துழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதிலளிக்க வேண்டியவர்களே. இந்த இடத்தைத்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிடித்துக் கொண்டது. 

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முன்னணி கஜன்கள் அணி, மணிவண்ணன் அணி என இரண்டாக பிளவு கண்டது. கஜன்கள் அணி, இரு பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்ட போதும், மணிவண்ணன் அணி யாழ்ப்பாணத்தில் கணிசமான ஆதரவுத் தளத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டது. அதுமாத்திரமல்லாமல், கஜன்கள் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மாநகர சபையையும், நல்லூர் நகர சபையையும் கைப்பற்றியது. அது மாத்திரமல்லாமல், முன்னணியை கட்சியாக பதிவு செய்து அதனை உரிமையாக்கும் வேலைகளிலும் மணிவண்ணன் அணி ஈடுபடத் தொடங்கியது. இது கஜன்கள் அணிக்கு பெரும் பிரச்சினையாக மாறியது. இந்த இடத்தில்தான், 13வது திருத்தம் என்ற சங்கை ரெலோ எடுத்து ஊதா, அதனைப் பிடித்துக் கொண்டது கஜன்கள் அணி. 13வது திருத்தத்துக்கு எதிராக கஜன்கள் அணி, வவுனியாவில் ஆரம்பித்த வாகனப் பேரணியொன்றை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நடத்திய பொதுக் கூட்டத்தோடு நிறைவு செய்தது. கஜன்கள் அணி எதிர்பார்த்த அளவைத்தாண்டிய மக்கள் பங்களிப்பும், ஆதரவும் பேரணிக்கு கிடைத்தது. அது, முன்னணி என்கிற கட்சிக்கான ஆதரவைத் தாண்டி 13வது திருத்தம் என்ற விடயத்தை மேலோ கொண்டு வந்தவர்களுக்கு எதிரானதாக பதிவானது. பேரணி நிறைவில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனைக் குறிப்பிடவும் செய்தார். 

முன்னணியின் 13வது திருத்தத்துக்கு எதிரான பேரணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி, செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சித் தலைவர்கள் ஊடக சந்திப்பை நடத்தியும் இருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மக்கள் கண்டு கொள்ளவே இல்லை. பேரணிக்கான ஆதரவு என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவைத் தாண்டியிருந்த நிலையில், தங்களின் செயற்திட்டத்தை நியாயப்படுத்தும் நோக்கில், ரெலோ அரசியல் கலந்துரையாடலொன்றை எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றது. கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சிகளின் தலைவர்களும், இன்னும் சில அரசியல் ஆய்வாளர்களும் அந்தக் கலைந்துரையாடலில் உரையாற்ற இருக்கின்றார்கள். 

தற்போது அவசியமற்ற ஒரு விடயத்தை பெரும் அரசியல் முனைப்புப் போன்று ரெலோ தூக்கிச் சுமந்ததன் விளைவை அவர்கள் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கிறார்கள். இதில், மாவை சேனாதிராஜாவின் நிலை இன்னும் மோசமானது. அவரை, அவரது முதலமைச்சர் கனவு தொடர்ச்சியாக படுகுழியில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றது. தன்னை ஏனைய கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்பதற்காக அவர், அந்தக் கட்சிகள் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையிலேயே இருக்கின்றார். ஆனால், தமிழரசுக் கட்சி ஒன்றைத் தலைமைத்துவக் கட்சி எனும் நிலையத் தாண்டிவிட்ட நிலையில், அவரது செயற்பாடுகளுக்கு அவர் கட்சிக்குள்ளேயே ஆதரவு இல்லை. 13வது திருத்தம் தொடர்பிலான கடிதத்தில் மாவை கையெழுத்திட்டமை மக்களின் ஆணைக்கு எதிரானது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றசாட்டினார். அதனையே, சுமந்திரனும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கூட மாவை கையெழுத்திட்ட விடயத்தை கேள்விக்குள்ளாக்கினர். இவ்வாறான நெருக்கடியான நிலையொன்றுக்குள் மாவை சிக்கிக் கொண்டிருக்கிறார். 

பதவி ஆசைகளும், பகல் கனவுகளும் தீர்க்கதரினமற்ற தீர்மானங்களை அரசியல் கட்சித் தலைவர்களை எடுக்க வைக்கின்றது. அதனை தடுப்பது மக்களின் தலையாய கடமை. இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலின் இலக்கினை குறு நலன்களுக்குள் புதைத்துவிடுவார்கள். 13வது திருத்தத்தை முன்னிறுத்தி ரெலோ செய்திருப்பது அப்படியான ஒன்றே. அதனைப் புரிந்து கொள்வதுதான், தமிழ் மக்களின் அரசியலைப் பாதுகாக்க உதவும். 

 

நன்றி - புருஷோத்தமன் தங்கமயில்

Last modified on Friday, 11 February 2022 08:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd