2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசு உறுதியளித்த திருத்தங்கள் இடம்பெறவில்லை என்ற விடயங் கள் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 பக்க அறிக்கையில் இலங்கைமீது மேலதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த அறிக்கை குறித்து மார்ச் 3ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இந்த அறிக்கை ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார்.
இந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி பிரஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது. இதுதவிர, 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக இந்த விவகாரம் உள்ளடக்கப்பட் டுள்ளது. இந்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட் டுக்களை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்தமை சட் டமா அதிபர்மீதான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள்மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.