ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அலுவலக உயர் அதிகாரிகளுக்கும் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இணைய வழி சந்திப்பு நேற்றிரவு (01) நடைபெற்றுள்ளது.
ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதன் மீதான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐ.நா-விற்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில், இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐ.நா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான C.V.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் கந்துகொண்டிருந்தனர்.
உடல்நிலை காரணமாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா. ஸ்ரீகாந்தாவால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதி பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐ.நா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.