எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சட்டத்தை நீக்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முன்னெடுக்கும் பிரசாரப் பணிகளை பாராட்டும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்ய முடியாது என்பதை தாம் காண்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரிப்பதாகவும் சஜித் பிரேமதாச, சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ‘பூச்சு வேலை’ மூலம் சீர்படுத்த முடியாது என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டம் நீக்கப்பட்டு இதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்கத்திறன் வாய்ந்ததாக சமன்படுத்தும் ஒரு சட்டம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.