web log free
December 23, 2024

நிபந்தனையற்ற கடனை வழங்கியது இந்தியா- பசில் ராஜபக்ஷ

மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) மாலை நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா - இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.

குறிப்பிட்ட கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ´நெனோ´ உர தட்டுப்பாடு நிலவினாலும் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவித்து அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன் போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd