web log free
December 23, 2024

இலங்கையில் இருந்து 29 கிலோ மீட்டர் கடல் தூரத்தை 13 மணிநேரத்தில் நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுமி!

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையுள்ள 29 கிமீ தொலைவை 13 மணிநேரம் 10 நிமிட நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்திருக்கிறார் ஆட்டிசம் ஸ்பெக்டரம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர். சாதனை சிறுமிக்கு நினைவு பரிசு, பூங்கொத்து கொடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

மும்பை இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன் ராய் இவரது மனைவி ரச்சானா ராய். இத்தம்பதியரின் மகளான ஜியா ராய் என்ற 13 வயது சிறுமி காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளி ஆவார்.

சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்புக்குள்ளானவர். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு குளத்தில் குளிக்கும்போது மாற்றுத்திறனாளியான ஜியா ராய் நீச்சல் அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

 இதையடுத்து ஜியா ராயின் தந்தையான மதன் ராய் தனது மகளுக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருப்பதை கண்டு முறையாக பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி ஜியா ராய் இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்தி வந்து தனுஷ்கோடி அடுத்துள்ள அரிசல்முனைப்பகுதியை வந்தடைந்தார்.

மேலும் இதுவரை இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை மாற்றுத்திறனாளி யாருமே நீந்தி வராத நிலையில் முதல் முதலாக மும்பையைச் சேர்ந்த காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஜியா ராய் 13 மணி நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்த மாற்றுத்திறனாளி ஜியா ராயை கரையில் இருந்த சுற்றுலா பயணிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நினைவு பரிசு, பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இதனால் மாற்றுத்திறனாளியின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் கடலில் நீந்தி வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இந்திய கடலோர காவல் படை, கடற்படை, மரைன் போலீசார் கடலில் பாதுகாப்பு வழங்கியதோடு கடற்கரைக்கு வந்த பின்னர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:-

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை பலவிதமான கடல் உயிரினங்களான கடல் பசு, ஜெல்லி மீன் வாழகூடிய கடல் பகுதியாக இருப்பதால் பலவித சவால்களை சந்தித்து மாற்றுத்திறனாளி சிறுமி நீந்தி வந்தது பாராட்டுக்குரிய விஷயம் என்றார்.

மேலும் நீச்சல் தெரியாமல் குளங்களில் ஆறுகளில் மற்றும் மெரினா கடற்கரையில் ஒரு ஆண்டிற்கு 100 பேர் இறப்பதாகவும், நீச்சல் பயில தற்போதைய இளைஞர்கள் மத்தியில் கடலில் நீச்சலடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமியை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் பயணிக்க வைத்த பெற்றோர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

ஜியாராய் 2021 ஆம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்தார். இவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd