web log free
October 18, 2024

பிரதமர் தலைமையில் இன்னும் சில மணித்தியாலங்களில் அவசர கூட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமயிலான ஆளுங்கட்சி நாடாளுமன்ற கூட்டம் இன்று அவசரமாக கூடுகின்றது. 

இதன்போது, அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நின்று ஆவேசப்பட்டு அரசாங்கத்தை மோசமாக விமர்சிக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளும் இது பாரிய குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் உடனடியாக ஏதேனும் தீர்மானம் எடுக்காவிட்டால் நிலைமைகள் மோசமடையும் என பங்காளிக்கட்சிகளும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டு நிலைமையை அடுத்து நாளாந்தம் மக்கள் வீதிகளில் வரிசையில் நின்று தமக்கான பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மக்களின் ஆவேசமான செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தினால் அரசாங்கத்தில் பலரும் இது குறித்து அரச மேலிடத்துடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக்கட்சிகளும் அரசாங்கத்தின் மீதே கடுமையாக பழி சுமத்தி வருகின்ற நிலையில் தற்போது ஆளுங்கட்சி பின்வரிசை உறுப்பினர்களும், அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூடுகின்றது. அலரிமாளிகையில் கூடும் இன்றைய கூட்டத்தின் போதும் நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்தும், உடனடியாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.    

 
Last modified on Tuesday, 22 March 2022 05:30