இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பிம்ஸ்டெக் அமைச்சர்கள்மட்ட அமர்வினை அடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தீர்க்கமான சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
அதற்கமைவாகவே செவ்வாய்க்கிழமை (29) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்றும் , இந்தியா அவ்வாறு வேறு எந்த நாடுகளுக்கும் தொடர் உதவிகளை வழங்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.