web log free
December 23, 2024

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக எச்சரிக்கும் வாசு

புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி நீக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் புறக்கணிக்கிறார்கள். சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷபிரதமர் பதவி வகிக்க முடியாது. பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரச நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்காமல் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சினை மீண்டும் ஸ்தாபிக்கும் முயற்சிகளை ஒருதரப்பினர் தற்போது முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அரச தலைவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd