அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடிச் செல்ல இருப்பதால் நாட்டினுடைய நன்மை கருதி நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானம் எடுத்துள்ளதாக சஜித் பிரேமதாஸ அணியிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை இல்லா பிரேரணையை பிற்போட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட சிலர் கோரிக்கை விடுத்ததாகவும் அதனடிப்படையில் நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி வாபஸ் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.