web log free
December 24, 2024

றம்புக்கணை சூழ்ச்சியும் சதியும்!!

கேகாலை - றம்புக்கணை பகுதியில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 13 பொதுமக்களும், 20 போலீஸாரும் அடங்குவதாக சிரேஷ்ட போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழு, பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொள்ளவுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள சிசிடிவி காணொளிகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மரண பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் கூறுகின்றார்.

 

என்ன நடந்தது?

இலங்கையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் இரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், றம்புக்கணை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட எரிபொருளை, பழைய விலைக்கு விநியோகிக்குமாறு வலியுறுத்தி, நேற்று (19) அதிகாலை 1 மணி முதல் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, நேற்று மாலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

றம்புக்கணை பகுதியை ஊடறுத்து செல்லும் ரயில் மார்க்கத்தை மறித்து, மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு போலீஸார், போராட்டக்காரர்களுக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த எரிபொருள் கொள்கலன் (பவுசர்) ஒன்றை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட, போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.

இதன்போது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராமையினால், குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் கொள்கலன் எரியூட்டப்பட்டிருக்கும் பட்சத்தில், றம்புக்கணை பகுதியே தீக்கிரையாகியிருக்கும் என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அதனால், ஏற்படவிருந்த சேதங்களை குறைக்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 42 வயதான கே.டி. லக்ஷான் உயிரிழந்துள்ளார்.

 

உறவினர்கள் கண்ணீர்

பின்னவல பகுதியிலுள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளுக்கு உணவு வழங்கும் தொழிலையே, உயிரிழந்த நபர் செய்து வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே தனது மருமகன் போராடியதாக உயிரிழந்த நபரின் மனைவியின் தாயார்   தெரிவித்தார்.

''நேற்று காலை சென்றார். பின்னர் வந்தார். அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். மீண்டும் மாலை பெட்ரோல் நிரப்ப செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். எமக்கு பொய் சொல்லி விட்டு, அங்கு தான் சென்றார். நாடு, இனம் என்பதற்காக செல்ல வேண்டும் என கூறினார். பெட்ரோல் நிரப்பி வருகின்றேன் என கூறியே சென்றார். சென்ற வேளையிலேயே இது நடந்துள்ளது. உயிரிழப்பதற்கே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்."

உயிரிழந்த கே.டி.லக்ஷானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

"இந்த இருவரையும் எப்படி பாடசாலைக்கு அனுப்புவது. பாடசாலைக்கு சீருடை வாங்கு தருமாறு மகன் கூறினார். அம்மாவுடன் சென்று வாங்குமாறு கூறி வங்கி அட்டையையும் வழங்கி விட்டே சென்றார். நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே அவர் போராடினார். பொய் சொல்லி விட்டேனும் செல்வார். நாங்கள் நாலு பேரும் இனி எப்படி வாழ போகின்றோம்?" என உயிரிழந்த நபரின் மனைவியின் தாய்   கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.

 

எரிபொருள் கொள்கலனை எரியூட்ட போராட்டக்காரர்கள் முயற்சித்ததாக போலீஸார் கூறும் கருத்தை, பிரதேச மக்கள் நிராகரித்திருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் வரை போராட்டக்காரர்கள் எந்தவித சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கவில்லை என அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அசார்டீன்,  தெரிவித்தார்.

கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட முயற்சித்தமையே, துப்பாக்கி பிரயோகம் நடத்த காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், நியமிக்கப்பட்ட குழு அனைத்து விதமான சாட்சியங்களையும் பெற்று விசாரணைகளை நடத்தி, உண்மையை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டும் என அவர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd