- தமிழக இணைய செய்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு மன்னார் மாவட்டம் பேசாளை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பினி பெண், ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.
இதேபோல் வியாழக்கிழமை மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை வந்தடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது எனவே தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர் நகுஷன் தெரிவித்துள்ளார்.