ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முதன்மை பணக்காரரான எலோன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ய ட்விட்டர் சபை, தீர்மானித்துள்ளது.
இதன்படி, 44 பில்லியன் டொலர்களுக்கு செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளத்தின் கட்டுப்பாட்டை உலகின் மிகப்பெரிய பணக்காரரிடம் ட்விட்டர் நிறுவனம் ஒப்படைக்கிறது.
இது இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன்களை காட்டிலும் 6 பில்லியன் டொலர்களே குறைவான தொகையாகும்.
நேற்று திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லர், "ட்விட்டர் சபை, எலோன் மஸ்கின் முன்மொழிவை மதிப்பீடு செய்த பின் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது ட்விட்டரின் பங்குதாரர்களுக்கு முன்னோக்கி செல்லும் சிறந்த பாதை என்று தாம் நம்புவதாக பிரட் டெய்லர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 83 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு சிறந்த ட்விட்டர் பயனரான மஸ்க், உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான பேச்சுக்கான தளமாக, நிறுவனத்தின் திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மோசமான விமர்சகர்கள் கூட ட்விட்டரில் இருப்பார்கள். ஏனென்றால் பேச்சு சுதந்திரம் என்றால் அதுதான் என்று மஸ்க் நேற்று திங்களன்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன், இதுவரை மின்னியல் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன தலைவராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலோன் மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளார்.