புதிய அரசியலமைப்பில் எவ்வாறான மாற்றங்களைச் செய்தாலும் 13வது திருத்தச் சட்டம் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் கூட்டுக் கட்சி ஒன்று கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும். 13 இருக்க வேண்டும்” என மீன்பிடி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மாற்றத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அதே அபிப்பிராயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
“தமிழ் மக்களின் தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மலையக தமிழ் மக்களின் தேசியத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற மறைந்த தேசியத் தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை சிறுபான்மையினருக்கு நல்லது என்றனர். ஆனால் இன்று சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.
எவ்வாறான திருத்தங்கள் கொண்டு வந்தாலும் 13வது திருத்தம் தொடர வேண்டும் என ஈபிடிபி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.