எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, நீதிமன்றின் ஊடாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைபொருள் வியாபாரிகள் நான்கு பேருக்கு முதற்கட்டமாக மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகவும் சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக போதைபொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்தியே தீர வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் ஒரு சில வாரங்களுக்குள் குறித்த நால்வருக்கும் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அலுகோசு பதவிக்கு இருவரை இணைத்துக்கொள்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று முன்தினம் நேர்முகப் பரீட்சை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.