ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் உடனடியாக அதனை செய்ய முடியும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வந்த நிலையிலேயே இன்றைய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய பிரதமரைக் கொண்ட புதிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு ஒரு பிரிவினர் ஜனாதிபதியிடம் கோரி வரும் அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு இன்னும் பெரும்பான்மை பலம் இருப்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என மற்றுமொரு பிரிவினர் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.