web log free
December 23, 2024

காலியானது மத்திய வங்கி கஜானா! டொலர் இருப்பு 00!!!

நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன், வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
 
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
 
இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Last modified on Wednesday, 04 May 2022 08:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd